போராட்டக்களத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார்!!!

காவிரி நீருக்காக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவிரி நீரை ஏன் தடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் இந்த உலகம் சமம் தான் எனவும் குறிப்பிட்டு, போராட்ட காலத்தில், தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ் குமார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கன்னட நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில், முன்னணி கன்னட நடிகர்களான தர்ஷன் (டி பாஸ்) மற்றும் சிவராஜ் குமார் போன்றோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். 

அப்பொழுது பேசிய சிவராஜ்குமார்," நமது அரசோ, அல்லது தமிழ் நாடு அரசோ, அல்லது ஆந்திரா அரசோ, ஒன்றாக சேர்ந்து பேசி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு மாநில அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மற்றும் நீதிமன்றமும் ஒன்றாக சேர்ந்து ஆலோசித்து தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு இது போன்று போராட்டங்களில் ஈடுபடுவது தவறு. போராட்டம் என்ற பெயரில் பேருந்துகளை அடித்து நொறுக்கினால், பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திடுமா? பேருந்துகளை அடித்து நொறுக்கினால் அது போராட்டமாகிடுமா? இதெல்லாம் போராட்டமில்லை, வன்முறை" என பேசியுள்ளார்.

மேலும், "இந்த உலகம் அனைவருக்குமானது. தமிழ்நாடு விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் மற்றும் ஆந்திர விவசாயிகள் வேறு வேறு அல்ல. அனைவரும் சமம் தான். காவிரி நீரை ஏன் தடுக்க வேண்டும்" என பேசியுள்ளார்.

மேலும் "தமிழ் நடிகர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பாதியிலேயே வெளியேற்றியது மிகப்பெரிய தவறு. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என, பெங்களூரில் நடந்த சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் சித்தார்த்தை வெளியேற்றியது குறித்து பேசி மன்னிப்பும் கோரியுள்ளார்.

மேலும், வரும் பிரச்சனைகளை அனைவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பதே மனிதத்தன்மை. என்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்களே இல்லை எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com