புதுச்சேரி அரசு பேச்சுவார்த்தை...மீனவர்களிடையே பதற்றம் தணியுமா?

புதுச்சேரி அரசு பேச்சுவார்த்தை...மீனவர்களிடையே பதற்றம் தணியுமா?

மீனவர்கள் மற்றும் புதுச்சேரி அரசின் அமைச்சர்களுடனான சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது. 
Published on

மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது, சுருக்கு வலை பயன்படுத்தும் தமிழ்நாட்டு படகுகளுக்கு புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கிடையாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுருக்கு வலை விவகாரம்

புதுச்சேரியில் சுருக்கு வலையை பயன்படுத்த வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீன்பிடி துறைமுகத்தில் சுருக்கு வலை பயன்படுத்தும் படகுகளை அனுமதிக்க கூடாது என மீனவர்கள் அறிவித்ததால் கடந்த 3 நாட்களாக மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அரசு நடத்திய பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18 மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் அனந்தமோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்கள் மற்றும் புதுச்சேரி அரசின் அமைச்சர்களுடனான சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது. 

சுமூகமான முடிவு எட்டப்பட்டது

நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,  சுருக்கு வலை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். நான்கு நாட்களுக்குள் அனைத்து சுருக்கு வலை படகுகளையும் துறைமுகத்தில் நிறுத்த வேண்டும்.

சுருக்கு வலை பயன்படுத்தும் தமிழ்நாட்டு படகுகள் புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி இல்லை என்றும் சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com