மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் சித்தார்த் பிதானி போதைப்பொருள் வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகராகிய சுஷாந்த் சிங் அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் குறித்து விசாரிக்கையில் இவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது மரணத்திற்குப் பின் போதை பொருள் தொடர்பு குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து சுஷாந்த் சிங்கிற்கு போதைபொருள் வழங்கியதாக அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி , ரியாவின் தம்பி, வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது ரியா உட்பட சிலர் ஜாமினில் வெளியாகி உள்ளனர்.
இதன் பின்பு சுஷாந்த் சிங்கின் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பரான சித்தார்த் பிதானியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையில் சித்தார்த் ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த புதன்கிழமை சித்தார்த்தை கைது செய்துள்ளனர்.
பின் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவர் மும்பை அழைத்து வரப்பட்ட நிலையில், மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்பொழுது வாட்ஸ்அப் உரையாடல் மூலமாக சித்தார்த் போதைபொருள் வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா, சோஃபிக் மற்றும் சுஷாந்தின் மேலாளர் மற்றும் வேலைக்காரர்களிடம் இவருக்கு போதைப்பொருள் தொடர்பான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கேட்டு கொண்டதை அடுத்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை சித்தார்த்தை காவலில் வைத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.