புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று நடைபெற்றது, இன்றைய கூட்டத்தில் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது, அதில் பேசிய சுயேட்சை உறுப்பினர் பிஆர்.சிவா, காரைக்காலில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் கல்யாணசுந்தரம் குற்றப்பிரிவு போலீசார் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக உள்ளதாகவும், பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிவதால் குற்றவாளிகளுடன் போலீசார் தொடர்பில் உள்ளனர் என தெரிவித்தார்,
இந்த கஞ்சா விற்பனை விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் எழுந்து பேசினர், இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பமாக இருந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, இளைஞர் சமுதாயம் பாதிக்கப்படுவதால் முதலமைச்சர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனை புதுவையில் அதிகரித்துள்ளது. கஞ்சாவால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற உணர்வை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கஞ்சா விற்பனையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.