ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை...!

ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. 

மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 6-ம் தேதி தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன், அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனு நவம்பர் 10-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாாித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

அந்த நோட்டீஸில், ‘மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்’ என்ற தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை நவம்பா் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com