தெலுங்கானாவில் காலை 11 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம்!

தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா  ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவைத் தவிர பிற மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்து விட்டது.

இறுதியாக 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் பர்கத்புரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியிலும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மேலவை உறுப்பினரும் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா பஞ்சாரா ஹில்ஸ் வாக்குச் சாவடியிலும்,  திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் ஜூப்ளி ஹில்ஸ்  வாக்குப் பதிவு மையத்திலும் வாக்களித்தனர். 

தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக மற்றும் ஆளும் பிஆர் எஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய வாக்குப் பதிவுக்காக 35 ஆயிரத்து 655 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 50 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நக்சலைட்டுகள் பாதிப்புகள் உள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

தெலுங்கானாவில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 20 புள்ளி 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com