அரசியல் ஆதாயத்திற்காகவே தடுப்பூசி திட்டம் விமர்சிக்கப்படுகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குற்றச்சாட்டு...

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தடுப்பூசி திட்டத்தை விமர்சிப்பது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடுமையாக சாடியுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காகவே தடுப்பூசி திட்டம் விமர்சிக்கப்படுகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குற்றச்சாட்டு...

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், நமது மருத்துவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள் என்றும், கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் மேற்கொண்ட முயற்சியும், மனிதநேய பண்பும் அளப்பரியது என்றும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் கடமைக்கான அழைப்பைத் தாண்டி மருத்துவர்கள் காட்டிய தைரியமும், இரக்கமும் கடவுளுக்குச் சமமானவை என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து தடுப்பூசி விநியோகம் குறித்து விளக்கமளித்த அவர், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தடுப்பூசிக்கான இருப்பு, விநியோகம் உள்ளிட்ட துல்லியமான தரவுகளை அரசு தொடர்ந்து அளித்து வருவதாகவும், இதுவரை விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் 75 சதவீதம் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜூன் மாதம் மட்டும் 11 கோடியே 50 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்தில் தொய்வு உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும்  கூறினார்.

நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக தடுப்பூசி திட்டத்தை விமர்சிப்பதாகவும், அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் தமக்கு வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மாநிலங்கள் தடுப்பூசிக்கான திட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, திட்டமிடுதலில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மக்களை அச்சப்படுத்தக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com