மக்களவை ஒத்திவைப்பு - புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ன?
புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை கொடுத்தபின் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களும் எம்.பிக்களும் புதிய நாடாளுமன்றம் வந்தடைந்தனர். அரசியலமைப்பு நகலுடன் ராகுல்காந்தி, ஆதிர் ரஞ்சன், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்களும் புதிய நாடாளுமன்றம் சென்றனர்.
தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மக்களவை கூடியதை அடுத்து, புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முதன்முதலாக உரையாற்றினார். அப்போது நாடாளுமன்ற வரலாற்று நிகழ்வுகளை அறியும் வகையில் டிஜிட்டல் புத்தகம் உள்ளது எனவும், பண்டிட் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது பெருமையளிப்பதாகவும் கூறினார்.
அரசின் மசோதாக்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்பை கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
அப்போது மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மசோதா ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, நாளை வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.