ஐ.பி.எல். போட்டி- 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் குவித்த சென்னை அணி- சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ருத்துராஜ்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில், முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்துள்ளது. 

ஐ.பி.எல். போட்டி-    20 ஓவர் முடிவில் 156 ரன்கள் குவித்த சென்னை அணி- சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ருத்துராஜ்

14ஆவது ஐ.பி.எல். தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில், 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கைவிடப்படட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, துபாயில் இன்று தொடங்கிய மும்பை அணிக்கு  எதிரான போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டூபிளிசிஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர்  ரன்னேதும் எடுக்காமல் டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

அடுத்ததாக வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கும், கேப்டன் தோனி 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 

சென்னை அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்  கெய்க்வாட் உடன் இணைந்து, ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ருத்துராஜ் அரைசதம் கடந்து அசத்தினார். ஜடேஜா 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த பிராவோ, அதிரடியாக ஆடி 8 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் சேர்த்தார்.