ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாடும் சீன வீரர்கள்...

ஒலிம்பிக் தொடரின் முதல் நாள் நிலவரப்படி, சீனா  3 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாடும் சீன வீரர்கள்...

கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன, ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை முதல் பல்வேறு பிரிவிலான போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

சீனா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நேற்று, முதல் தங்கத்தை வென்றிருக்கிறது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார். சீனாவின் கியான் பெற்ற மொத்த புள்ளிகள் 251 புள்ளி 8 ஆகும். இதுதான் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் அதிகபட்ச புள்ளிகளாகும்.  

ஒலிம்பிக் போட்டியில் சீனா தற்போதைய நிலவரப்படி  3 தங்கபதக்கம் வென்றுள்ளது. ஜப்பான், இகுவடார், ஈரான், தென் கொரியா, கொசோவோ ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கபதக்கம் வென்றுள்ளன.பெண்கள் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியா - நெதர்லாந்துக்கு இடையேயான பெண்கள் ஹாக்கி போட்டியின் முதல் சுற்றில், இந்திய அணி தனது முதல் கோலை பதிவு செய்தது, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.