" அவர் என்னை விட திறமையானவர்.." - கோலியை பாராட்டிய சௌரவ் கங்குலி..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்ததைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

" அவர் என்னை விட திறமையானவர்.." - கோலியை பாராட்டிய சௌரவ் கங்குலி..!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி போட்டியாக ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதன் பின்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி ஆஃப்கான் பந்துவீச்சாளர்களை, ஒரு வித பதற்றத்திலேயே வைத்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அசால்ட்டாக அடித்த விராட் கோலி, 71வது சதத்தை அடிக்க முடியாமல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக திணறி வந்தார். அதற்காக பல கேலி பேச்சுக்களுக்கும் ஆளானார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பு முடிவுக்கு வந்து, மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த  கோலி 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை அடித்தார். 

இதற்காக பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர். அவரது ரசிகர்களும், விராட் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, கோலியை பாராட்டியுள்ளார். கோலி, ஒரு வீரராக தன்னை விட நட்சத்திர இந்திய பேட்ஸ்மேன் மற்றும் மிகவும் திறமையானவர் என்று கூறினார். யூடியூபில் ஒரு நேர்காணலில் பேசிய கங்குலி, “கேப்டன்சி ஒப்பீடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வீரராக திறமை அடிப்படையில் ஒப்பிட வேண்டும். அவர் என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார். 

இது பற்றி மேலும் பேசிய கங்குலி, " நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் விளையாடினோம், நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினோம். நான் என் தலைமுறையில் விளையாடினேன், அவர் தொடர்ந்து விளையாடுவார், அநேகமாக என்னை விட அதிகமான கேம்களை விளையாடுவார். " என கூறி பாராட்டியுள்ளார்.