”நான் விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு மட்டும்தான் விளையாடுவேன்”:கண்ணீர்விட்ட விராட் கோலி

தான் விளையாடும் கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிகாக மட்டும் தான் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

”நான் விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு மட்டும்தான் விளையாடுவேன்”:கண்ணீர்விட்ட விராட் கோலி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டா் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் விளையாடி விளையாடியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க வீரர் படிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்தில் போல்ட் ஆனார். இவரைத்தொடர்ந்து ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் நரைன் ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கொல்கத்தா அணியில் சிறப்பாக சுனில் நரைன் 4, பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

போட்டி முடிந்த பின்னர் பேசிய விராட் கோலி, இளைஞர்கள் நம்பிக்கையுடனும், முழு சுதந்திரத்துடனும் விளையாடுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு நான் என்னால் முடிந்த சிறந்ததைக் கொடுக்க முயற்சித்துள்ளேன். இந்திய அணி அளவிலும் நான் அதனைச் செய்துள்ளேன். நான், என்னுடைய சிறப்பானதைக் கொடுத்துள்ளேன். அதற்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், ஒவ்வொரு வருடம் ஆர்.சி.பியை தலைமையேற்று என்னுடைய 120 சதவீத திறனை வெளிப்படுத்தியுள்ளேன் என்பதை உறுதியாகக் கூற முடியும். அதனை இந்த அணிக்கு இனிமேல் ஒரு வீரனாக செய்வேன். உறுதியாக வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட விசுவாசமாக இருப்பது மிகவும் முக்கியம். பெங்களூரு அணி என்னை நம்பியது. ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு மட்டும்தான் விளையாடுவேன்' என்று தெரிவித்தார்.