இந்தியா VS இலங்கை: சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ்...டி20 தொடரை கைப்பற்றியது யார்?

இந்தியா VS இலங்கை: சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ்...டி20 தொடரை கைப்பற்றியது யார்?

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

இலங்கை VS இந்தியா அணிகள் மோதல்:

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அந்தவகையில், மும்பையில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, புனேவில் நடந்த 2 வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதனால் இரண்டு அணிகளும் 2க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. 

3வது டி20 போட்டி:

இந்நிலையில் டி20 தொடரை  கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3 வதும் கடைசியுமான டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோர்டில் நேற்று இரவு (ஜனவரி 7 ஆம் தேதி) நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் முதல் ஓவரில் 1 ரன் எடுத்திருந்த நிலையில், கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கி  பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி, 16 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

சதம் அடித்த சூர்யகுமார் யாதவ்:

இதைத்தொடர்ந்து, ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கில்லு இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விகெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

இந்தியா வெற்றி:

இதைத்தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடித்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தனர். இறுதியில் 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.