நாக் அவுட் போட்டிகள்: மாலைமுரசு - புதிய தலைமுறை அணிகள் மோதல்...வெற்றியை ஈட்டியது யார்?

நாக்  அவுட் போட்டிகள்: மாலைமுரசு - புதிய தலைமுறை அணிகள் மோதல்...வெற்றியை ஈட்டியது யார்?

சென்னையில் நடைபெற்ற ஊடகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் புதிய தலைமுறை அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மாலை முரசு செய்திகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 


சென்னையில் ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரை, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, கிரிக்கெட் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில், மாலை முரசு, புதிய தலைமுறை, சன் நியூஸ், பாலிமர், ஜெயா டி.வி., நியூஸ் தமிழ் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் பங்கேற்கின்றன. 

இதையும் படிக்க : ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?

நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில், இன்றைய தினம் மாலை முரசு தொலைக்காட்சி அணி மற்றும் புதிய தலைமுறை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மாலை முரசு அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 14 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 89 ரன்களை குவித்தது. அதில் செந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி 43 ரன்களை குவித்தார். இதேபோன்று, மகிமகேஷ், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 17 ரன்களை குவித்து அணிக்கு வலிமை சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக களம் இறங்கிய புதிய தலைமுறை அணி, 13 புள்ளி 2 ஓவர்களில் அடுத்தடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 56 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதில் புதிய தலைமுறை அணி வீரர் முத்து 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் எடுத்தார். 
மாலை முரசு அணி வீரர் கிருஷ்ண மூர்த்தி 4 விக்கெட்டுகளையும், மகிமகேஷ் 3 விக்கெட்டுகளையும் சந்தோஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தனர்.   

மாலை அணி வெற்றி பெற்ற நிலையில், 17 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிமகேஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.