ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா  

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா   

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நமீபியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து ரன்களை குவிக்க தடுமாறியது. அடுத்து வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லிசிக், 44 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஆனால், எஞ்சிய வீரர்கள், நமீபியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நமீபியா அணி களம் இறங்கியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், நமீபியா அணியும் ரன்கள் எடுக்க சற்று தடுமாறியது. இருப்பினும், மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்த ஜே.ஜே.ஸ்மித், இறுதி நேரத்தில் நிலைத்து நின்று ஆடினார். கடைசி ஓவரில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஸ்மித் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 19 புள்ளி 1 ஓவர்களில் நமீபியா அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.