கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா!

 கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா!

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக், 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதனிடையே, உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது. இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடைபெற வேண்டியது. கொரோனாவின் கொடூர தாண்டவத்தால் முதல் முறையாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு, தற்போது கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன்  தொடங்கியது. கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம், தொடர் ஓட்டமாக மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றியதும், ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கி விட்டது. அப்போது, லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிர்ந்த டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகம் அடைய செய்தன.

விழாவின் முக்கிய அம்சமாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் 204 நாட்டு அணியினரும், தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏந்தும் கவுரவம், குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.