ஓவல் டெஸ்ட்: இமாலய இலக்கை நிர்ணைக்கும் முனைப்புடன் ஆடி வரும் இந்திய அணி...

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி, அதிக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

ஓவல் டெஸ்ட்: இமாலய இலக்கை நிர்ணைக்கும் முனைப்புடன் ஆடி வரும் இந்திய அணி...

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியில், டெவிட் மலான் மற்றும் கிரேக் ஓவர்டன் இருவரும் அடுத்தடுத்து உமேஷ் யாதவ் பந்தில் வீழ்ந்தனர். இதனையடுத்து ஒல்லி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது.

பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கிறிஸ் வோக்ஸ் அரை சதம் அடித்ததால், இங்கிலாந்து அணி 290 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 99 ரன்கள் பிந்தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், ராகுல் - ரோஹித் ஜோடி விக்கெட் விழாமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 22 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.