இலங்கைக்கு எதிரான போட்டி... தொடரை கைப்பற்றியது இந்திய அணி...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2க்கு பூஜ்ஜியம் கைப்பற்றியது.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்த லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய படிதார் 112 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் சதம் அடித்தன் மூலம், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.
இதனையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, 2வது குவாலிபையர் ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் லக்னோ அணி, தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.
அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆஃப் சுற்றில் முதல் குவாலிபையர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், புள்ளிகள் பட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பட்லர் 89 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய மில்லர் 68 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதவுள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி பெங்களூருவா? லக்னோவா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சும், முன்னணி வீரரான ரபேல் நடாலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டனை 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோக்கோவிச் கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தினால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து இத்தாலி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலின் சாதனையை சமன் செய்யும் நோக்கத்துடன் பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை 6-3, 6-1, 6-0 என்ற கோல்கனக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், டிரையல் பிளேசர்ஸ் அணியை 49 ரன் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வென்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கள் நடைபெறும் அதேவேளையில், மகளிருக்கான டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சேலஞ்ச் தொடர் நேற்று தொடங்கியது. இதில்,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சூப்பர் நோவாஸ், ஸ்மிரிதி மந்தானா தலைமையில் டிரையல் பிளேசர்ஸ், தீப்தி ஷர்மா தலைமையில் வெலாசிட்டி ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
புனேவில் நடைபெற்ற முதல் போட்டியில், சூப்பர் நோவாஸ் - டிரையல் பிளேசர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சூப்பர் நோவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டிரையல் பிளேசர்ஸ் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
20 அணிகள் பங்கேற்று விளையாடும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடிக்கும், அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும். இந்த நிலையில், நடப்பு சீசனுக்கான ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. நேற்று நடைபெற்ற போட்டியில், ’மான்செஸ்டர் சிட்டி’ மற்றும் ’ஆஸ்டன் வில்லா’ அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்டன் அணி, ஒரு கட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.
இறுதியில், மான்செஸ்டர் சிட்டி அணி அதிரடியாக ஆடி, கடைசி கட்டத்தில் 3 கோல்களை அடித்து, அசத்தலாக வெற்றி பெற்றது. இதன்மூலம், 38 போட்டிகளில் 29 வெற்றி, 6 டிரா மற்றும் 3 தோல்விகள் என, மொத்தம் 93 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த மான்செஸ்டர் சிட்டி அணி, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.