ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை.,அதுவும் பெண்கள் பிரிவில்.,சாத்தியமானது எப்படி.?

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை.,அதுவும் பெண்கள் பிரிவில்.,சாத்தியமானது எப்படி.?

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே உலகிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனையின் கனவாக இருக்கும் போது, மூன்றாம் பாலினத்தவரான திருநங்கை ஒருவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். 

ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும் தன் தேசத்திற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக இருக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் மட்டுமல்ல மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த சூழலில், மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், மகளிர் பளு தூக்குதல் பிரிவில் பங்கேற்க, லாரல் தேர்வாகி உள்ளார். நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் கடந்த 1978ஆம் ஆண்டில் பிறந்த லாரல் ஹப்பார்ட், பாலின மாறுபாட்டிற்கு முன்னதாக சிறுவயதிலேயே பளு தூக்குதலில் தேசிய அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வரையிலும், பளு தூக்குதல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பங்கேற்று வந்த லாரல், டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் 87 கிலோ பிரிவில் போட்டியிட உள்ளார்.

டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களின் அளவு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்தால், திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஒரு பெண்ணாக போட்டியிட அனுமதிக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தனது விதியை மாற்றியமைத்தது. அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். லாரலின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழே இருந்தாலும், அவர் மகளிர் பிரிவில் பங்கேற்பது நியாயமற்றதாக இருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆண்களைப் போன்று எலும்பு மற்றும் தசைகளை பெற்ற அவர் எப்படி பெண்களின் பிரிவில் போட்டியிடலாம் என ஒருசாரார் கேள்வி எழுப்பினாலும், லாரல் ஹப்பார்ட்டை ஒலிம்பிக்கில் பங்கேற்க செய்யும் முடிவை நியூசிலாந்து அரசாங்கமும், அந்த நாட்டின் விளையாட்டு அமைப்பும் வெகுவாக வரவேற்றுள்ளது.

ஆனால், கடந்த காலங்களிலும் ஹப்பார்ட் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஹப்பார்ட் பங்கேற்பதை தடுப்பதற்கு ஆஸ்திரேலியாவின் பளு தூக்குதல் அமைப்பு முயற்சி செய்தது. அதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுப்பு தெரிவித்த போதிலும், காயத்தின் காரணமாக ஹப்பார்ட் அப்போது போட்டியில் இருந்து விலக நேரிட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு சமோவாவில் நடந்த பசிபிக் கேம்ஸில், லாரல் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார். அதே நம்பிக்கையுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.