பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பதக்கத்தை தவறவிட்டார்...

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பதக்கத்தை தவற விட்டுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பதக்கத்தை தவறவிட்டார்...

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. தகுதி சுற்றில் இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா கலந்து கொண்டனர். மொத்தமாக 626 புள்ளி 5 புள்ளிகள் எடுத்த இளவேனில் வாலறிவன், 16-ம் இடத்தையே பிடித்தார்.

முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் அவர் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். இதைப்போல மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா, 621 புள்ளி 9 புள்ளிகள் பெற்று 36-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த சவுரப் சவுத்ரி, இறுதி போட்டிக்கு முன்னேறினார். அவருக்கு பதக்கம் நெருங்கி வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி போட்டியில் 137 புள்ளி 4 புள்ளிகள் மட்டுமே எடுத்து, 7-வது இடத்தை பிடித்திருந்தார். இதனால் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தோல்வி அடைய, இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பும் கை நழுவி போனது.

வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி, தென்கொரியாவின் ஆன் சான் - கிம் ஜி டியோக் இணையிடம் பலப்பரீட்சை நடத்தியது. 4 செட் கொண்ட இந்த போட்டியில், ஒவ்வொரு செட்டிற்குள் 2 புள்ளிகள் வழங்கப்படும். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய  தென்கொரிய அணி 3 செட்டையும், இந்திய அணி 1 செட்டை மட்டுமே கைப்பற்றியது. இதனால் 6 க்கு 2 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியை தழுவியது.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இஸ்ரேல் வீரர் சில்பர்மேன் மிஷாவிடம் 17 க்கு 21, 15 க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.