யூரோ கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி,.துருக்கியை வீழ்த்திய ஸ்விட்சர்லாந்து .! 

யூரோ கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி,.துருக்கியை வீழ்த்திய ஸ்விட்சர்லாந்து .! 

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் வெற்றி வாகை சூடின.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பலம் வாய்ந்த இத்தாலி மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க விடாமல் வரிந்து கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 

ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் கிடைத்த பிரீகிக் வாய்ப்பில், இத்தாலியின் மேட்டியோ பெசினா கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு இரு அணி வீரர்களின் கோல் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இறுதியில் 1-0 என்ற கணக்கில் வேல்ஸை வீழ்த்திய இத்தாலி 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 


மற்றொரு ஏ பிரிவு போட்டியில் ஸ்விட்சர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மல்லுக்கட்டின. ஆட்டம் தொடங்கிய 6ஆவது நிமிடத்திலேயே சுவிஸ் வீரர் ஹாரிஸ் செஃபரோவிக் கோல் அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரரான ஷெர்டன் ஷாக்கிரி 26 மற்றும் 68ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தினார். ஆனால், பதிலுக்கு துருக்கி அணி ஒரேயொரு கோல் மட்டுமே அடித்ததால் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.