இந்தியா VS ஆஸ்திரேலியா : 4-வது 20 ஓவர் போட்டியை வென்றது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில்  20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2 க்கு 1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் 4-வது போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 35 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை எடுத்தார். இதையடுத்து இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4வது இருபது ஓவர் போட்டியில் வெற்றிப் பெற்றதையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com