உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியலின் உச்சத்தில் இந்திய அணி... இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம்  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில்  இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்களும் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 106 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக தூர சிக்சரை பதிவு செய்தார்.

இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. 

இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை 4-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்த முகமது ஷமி, ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை 2011, 2015, 2019, 2023 ஆகிய 4 உலக கோப்பை தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com