விளையாட்டு
அது என்ன ஒலிம்பிக் கிராமம்..? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட குடியிருப்பு பகுதியே ஒலிம்பிக் கிராமம் எனப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்...
பொதுவாக எந்தவொரு பெரிய அளவிலான போட்டியாக இருந்தாலும், போட்டி நடைபெறும் இடத்தில் விளையாட்டு கிராமம் அமைக்க வேண்டியது அவசியம். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உள்ளிட்டோர் ஆங்காங்கே அலையாமல், குறிப்பிட்ட ஓர் இடத்தில் தங்குவதற்காக கட்டமைக்கப்படும் பிரத்யேக வளாகம் தான் இந்த விளையாட்டு கிராமம். கடந்த 1995ஆம் ஆண்டு தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்ட போது, கோயம்பேட்டில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளின் போது, வழக்கமாக ஒலிம்பிக் பூங்காவிற்குள்ளேயோ அல்லது போட்டி நடக்கும் நகரத்தின் ஏதாவது ஒரு பகுதியிலோ ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்படுவது வழக்கம். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சகல வசதிகளுடன் ஒரே இடத்தில் தங்குவதற்காக கட்டமைக்கப்படும் குடியிருப்பே ஒலிம்பிக் கிராமம் எனப்படுகிறது.
நவீன ஒலிம்பிக்கின் தந்தை எனப் போற்றப்படும் பியரி டி கூபர்டின், தான் இந்த ஒலிம்பிக் கிராமத்திற்கும் விதை போட்டவர் ஆவார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் 1924ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வரை, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள், போட்டி நடக்கும் நகரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில், போட்டியாளர்களுக்காக அறைகளை வாடகைக்கு எடுத்தன. இதனால் போட்டி நடத்தும் செலவுகள் மிகவும் அதிகரித்தன. இதனால் பாரிஸின் ’எஸ்டேடு ஒலிம்பிக் டெ கொலம்பஸ்’ அருகே போட்டியாளர்கள் தங்க ஏதுவாக ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சிற்றறைகளைக் கட்டினர்.
இதனையடுத்து தற்போதைய ஒலிம்பிக் கிராமங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில், பியரி டி கூபர்டினின் ஆலோசனையின்படி, 1932ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது, முதல் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளுடன், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளும் அமைக்கப்பட்டன. இத்தகைய ஒலிம்பிக் கிராமங்களில் தங்குவதற்கான அறைகள், பயிற்சி மையங்கள், டைனிங் ஹால்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி மையங்கள், மருத்துவமனை, தபால் நிலையம், வங்கி, கொரியர் சேவை, டிரை கிளீனிங், ஏ.டி.எம். மற்றும் வாகனங்கள் என அங்கு இல்லாத வசதிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
1972ஆம் ஆண்டு நடந்த மியூனிக் படுகொலையை அடுத்து, ஒலிம்பிக் கிராமங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். குடும்ப உறுப்பினர்களும், முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும், தகுந்த சரிபார்ப்பிற்கு பிறகு அங்கு தங்க அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளை முடித்த பின்னர், சிற்றின்ப வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறப்படுகிறது.