வெற்றி பெறுவது எப்படி என்பதையே பல ஆண்டுகளாக மறந்துவி்ட்டார்கள் என இலங்கை அணியை முத்தையா முரளிதரன் விமர்சித்துள்ளார்.
கொழும்பு நகரில் ேநற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது, ஆட்டமும் இலங்கை பக்கம் சென்றுவிட்டது ஆனால், இலங்கை அணியின் கேப்டன் சனகா பந்துவீச்சாளர்களைச் சரியாகப் பயன்படுத்தாதே தோல்விக்குக் காரணம் என கூறப்படுகிறது. வெற்றியை கோட்டைவிட்டது குறித்து ஏற்கெனவே கேப்டன் சனகாவுக்கும், பயிற்சியளர் ஆர்தருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் நடந்தது.
இந்த நிலையில், முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியை வறுத்தெடுத்துள்ளார். அவர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில், இலங்கை அணிக்கு எவ்வாறு வெற்றி பெறுவது, வெற்றி பெறும் வழிகள், பல ஆண்டுகளாகவே மறந்துவிட்டது என நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். இலங்கை அணிக்கு இனிவரும்காலம் கடினமாக இருக்கும், ஏனென்றால், அவர்களுக்கு ஒரு போட்டியைக் கூட வெல்வது எவ்வாறு என்பது தெரிந்திருக்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.