19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. வண்ண வண்ண உடைகளில் சீன பெண்களின் குழு நடனம் மற்றும் பல்வேறு நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து நிகழ்த்திய கண்கவர் வான வேடிக்கை பார்வையார்களை பிரம்மிக்க வைத்தது. இரவை பகலாக்கும் வகையில், வானில் வர்ண ஜாலம் நிகழ்த்திய வாண வேடிக்கையை கண்டு பார்வையாளர்கள் மெய் சிலிர்த்தனர்.
தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் தேசிய கொடியை இந்திய வீரர் வீராங்கனைகள் ஏந்தி சென்றனர்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. சீனாவில் 6 நகரங்களில் 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.