உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகளப் போட்டிகளில் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் பெற்று சொந்த ஊர் திரும்பிய ஆலங்குளத்தைச் சேர்ந்த மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு படித்து வரும் அபிநயா. சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் உடைய இவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைந்த வீரர் வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்ற 100 மீட்டர் தூரத்தை 11.84 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 1000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் பங்குபெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தையும் வென்றது. இரு பதக்கங்களுடன் சொந்த ஊரான கல்லூத்து கிராமத்திற்கு திரும்பிய அபிநயாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மேளதாளம் வழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிநயா, வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான தங்கப்பதக்கம் பெற்று வருவது தன்னுடைய லட்சியம் எனவும், தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற அரசு தனக்கு பொருளாதார உதவி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்