அரசுப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!  

அரசுப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு!   

தீபாவளியை முன்னிட்டு, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன் படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு 21 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் 7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும் 1 புள்ளி 67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் 8 ஆயிரத்து 400 ரூபாய் பெறுவர். மொத்தமாக தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு, 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.