
சென்னை ஆலந்தூரில் உள்ள தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் ஜூன் மாதத்தில் 4 வது அலை வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே அதற்கு முன்னதாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரே வாரத்தில் 12 முதல் 14 வயதுடைய 10 புள்ளி 91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல, 15 முதல் 18 வயதுடையவர்களில் 85 புள்ளி 44 சதவீதம் பேர் முதல் தவணையும், 60 புள்ளி 90 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92 புள்ளி 10 சதவீதம் பேர் முதல் தவணையும், 75 புள்ளி 50 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.