சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிகளில் காய்ச்சப்பட்டு மறைமுகமாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கள்ள சாராயத்தை முழுவதும் ஒழித்திடும் வகையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அவர்கள் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் மற்றும் நகர காவல் துறையினர் என அனைவரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலை கரிய கோயில் பாலமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி இன்று காலை சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கரிய கோயில் காவல் எல்லைக்குட்பட்ட மண்ணூர் வனப்பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது, கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல்கள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து ஐந்து பேரல்களில் ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் ஊரல்களை கிழே கொட்டி அழித்தனர். அதனைத் தொடர்ந்து, கள்ள சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் உடைத்து எறிந்ததுடன் குற்றவாளிகளை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும், கருமந்துறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களிடையே கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.