சென்னை மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் 1,027 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2023-24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் சொத்து வரி 770 கோடியும் தொழில் வரி 257 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கால அவகாசம் முடிந்தும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2% அபராதம் விதிக்கப்படும் எனவும் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக வரி செலுத்தாமல் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.