10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு..!

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு..!

சென்னை தலைமை செயலகத்தில் 2022- 2023ம் கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைப்பெறும் என்றும்,  8.80 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் 11ம் வகுப்பு பொது தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறிய அவர், 8.50 லட்சம் மாணவ மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு,அடுத்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளதோடு,10 லட்சம் மாணவ மாணவிகள் 3986 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர் எனவும் கூறினார்.

மேலும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் இரண்டாம் வாரத்திற்குள் முடிவடையும் என்றும், அதேபோல் இந்த ஆண்டு பாடத்திட்டம் குறைப்பு கிடையாது, முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வுக்கு போதுமான இடைவெளி அளிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, பொதுத் தேர்வுகளுக்கு முன்பாகவே  மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்கப்படும் என்றார். காலமாற்றத்திற்கு ஏற்ப பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை பரிட்சார்த்த முறையில் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர், தமிழக அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட கூடிய அரசு அதிகாரிகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு...ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!