கடந்த 2 ஆண்டில் 120 புத்தகங்கள் வெளியீடு - முதலமைச்சா் பெருமிதம்!

கடந்த 2 ஆண்டில் 120 புத்தகங்கள் வெளியீடு - முதலமைச்சா் பெருமிதம்!

கடந்த 2 ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திண்டுக்கல் லியோனியின் ”வளா்ந்த கதை சொல்லவா” நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தொிவித்துள்ளாா். 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் லியோனியின் ”வளர்ந்த கதை சொல்லவா” நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டாா். அதன் முதல் பிரதியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். 

தொடா்ந்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில், திண்டுக்கல் லியோனி நகைச்சுவை பேச்சால் பாா்வையாளா்களை தன் வசப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவா் என குறிப்பிட்ட அவா் தமிழ்நாடே திண்டுக்கல் லியோனி பேச்சை கேட்டு மயங்கியுள்ளது. அப்படி இருக்கையில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? எனவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவா், எந்த தேர்தல் ஆக இருந்தாலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்பவராக லியோனி விளங்கி கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது எனவும் தொிவித்துள்ளாா். 

தொடா்ந்து பேசிய முதலமைச்சா், அதிமுக ஆட்சியில் ஓராண்டு காலத்தில் 6 புத்தகங்கள் தான் வெளியிட்டு உள்ளாா்கள். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 120 புத்தகங்கள் வெளியாகி இருப்பதாக குறிப்பிட்ட அவா், மேலும் 150 புத்தகங்கள் தயாராகி வருவதாகவும் பெருமிதம் தொிவித்துள்ளாா். தமிழ்நாட்டில் புத்தகப் புரட்சி நடக்க லியோனியும் ஒரு காரணம் என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ. ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.