உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி, மயக்கம்!

மாமல்லபுரத்தில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம், அப்படி மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிகளில் தங்குவதும் அங்குள்ள கடைகளில் உணவருந்துவதும் வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள நிஹால் ஆம்பூர் பிரியாணி கடையில் நேற்று மதியம் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கும் போது கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தி சமைக்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் இந்த உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து சமூக அலுவலர் கூறுகையில், இந்த பிரியாணி கடை மீது ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று புகார் வந்ததாகவும் இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்த கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். 

இதுபோன்று மக்கள் உயிரோடு விளையாடக்கூடிய சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!