கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது 20 கிலோ; கஞ்சா பறிமுதல்!

சென்னையில் இரு வெவ்வேறு இடங்களில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று இரவு மெரினா போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராகுல் மகரனா(18)  மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் ஆட்டோ மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரி சிவாவிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.  பின்னர் இருவர் மீது  வழக்கு பதிவு செய்த போலீசார் ராகுல் உட்பட இருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று மாலை அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் இருந்து  இறங்கி வந்த வாலிபரை பிடித்து அவரது உடமைகளை சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்த நாராயணா டோலி(30)  என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்