சுருக்குமடி வலையை தடை செய்ய கோரி 21 மீனவ கிராமங்கள் வேலை நிறுத்தம்!!

சுருக்குமடி வலையை தடை செய்ய கோரி 21 மீனவ கிராமங்கள் வேலை நிறுத்தம்!!
Published on
Updated on
1 min read

சுருக்குமடி வலையைத் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில், 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடலின் சுற்றுச்சூழலை பாதிப்பதாக கூறி சுருக்குமடி மற்றும் அதிவேக ரெட்டை எஞ்சின்களுக்கு தமிழகத்தில் தடை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்ட போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருக்குமடி வலைகளை மீன்பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சுருக்குமடிவலைகளுக்கு ஆதரவாக பூம்புகார் மற்றும் சில மீனவ கிராமங்களும், எதிர்ப்பாக தரங்கம்பாடி மற்றும் 21 மீனவ கிராமங்களும் உள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட படகுகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லாத நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த 11 சுருக்குமடிவலை மீனவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று தங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், சில படகுகள் மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்குள் சுருக்குமடியை பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும், அதனை சந்திரபாடி மீனவர்கள், கடலில் வாங்கி, பைபர் படகில் கரைக்கு கொண்டு வந்ததாகவும், தெரிவித்து தரங்கம்பாடி மீனவர்கள் படகையும் படகில் இருந்த 3 மீனவர்களையும் சிறைபிடித்து  தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த பொறையார் கடலோர காவல்படையிர், சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களை மீட்டு பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். சுருக்குமடி வலையில் மீன் பிடிக்கப்பட்டதாக தரங்கம்பாடி மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், மின்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில்  ஏலமிடப்பட்டது. 

இது குறித்து தரங்கம்பாடி மீனவர்கள் பேசியபொழுது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும், அனுமதி பெறாமல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொழில் மறியல் செய்து வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, சுருக்குமடி வலையைத் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் உள்ள சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டள்ளன. சுருக்குமடி வலைத் தொடர்பாக, மீனவ கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com