மியான்மரில் சிக்கித்தவித்த நபர்கள்...! தாயகம் மீட்பு..! வரவேற்ற அமைச்சர்..!

மியான்மரில் சிக்கித்தவித்த நபர்கள்...! தாயகம் மீட்பு..! வரவேற்ற அமைச்சர்..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இருந்து தாய்லாந்திற்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக அழைத்து சென்று சட்டவிரோதமான பணிகளை செய்யச் சொல்லி துன்புறுத்தப்படுவதால் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இந்திய தூதரக உதவியுடன்  தமிழக அரசின் அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை முலமாக கடந்த மாதம் மியான்மரில் இருந்து 26 பேர் மீட்டு அழைத்து வரப்பட்டனர். தற்போது 3ம் கட்டமாக சென்னை, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், திருவள்ளூர், தர்மபுரி, திருவாரூர், கோவை, காஞ்சிபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த சிதம்பரவர்மன், ஞானபிரகாஷ், விக்னேஷ், சூர்யா, இம்ரான் தீன், அருண்குமார் உள்பட 22 பேர் மியான்மாரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக ஐதராபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து விமானங்கள் முலம் சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த 22 பேரையும் தமிழக அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அவர்களை தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக போலி ஏஜெண்டுகள் முலம் ஆசை வார்த்தைகளை நம்பி கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் சட்ட விரோதமாக செயல்பட வற்புறுத்தியதால் தவித்துள்ளனர். அவற்றை மறுத்த காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் பெற்றோர்கள் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு கிடைத்தது. பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து 64 பேரை அழைத்து வந்திருக்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என்பதை விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் இளைஞர்கள் யாரும் ஏமாற கூடாது. மேலும் அங்குள்ளவர்களை மீட்டெக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை, சுற்றுலா விசாவில் அழைத்து சென்று வேலைகள் தருவது; வேலை செய்யாவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனவும் கூறினார். விழிப்புணர்வு ஏற்பட்டதால் தான் தற்போது போலி ஏஜெண்டுகள் மூலம் செல்வது குறைந்து உள்ளது. என்றும் அவர் கூறினார். தொடர்ந்து மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் திரும்பியவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com