
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புனவாசிபட்டி சிவலிங்கபுரம் 4ரோடு பகுதியை சார்ந்த காசிராஜன் என்பவர் மகன் நவீன் குமார் 13. மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன்கள் வசந்த் வயது 13 மயில்சாமி வயது 11. இவர்கள் மூன்று பேரும் பள்ளி விடுமுறை காரணமாக தங்கள் வீடுகளில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர், அருகில், தனியாருக்குச் சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில், மண் வெட்டி எடுக்கப்பட்ட மிக பெரிய பள்ளம் உள்ளது. நேற்று நள்ளிரவு பெய்த மழையால் மழை நீரானது சுமார் 15 அடி ஆழத்தில் தேங்கியுள்ளது.
இந்த குட்டையில் சில ஆடுகள் தண்ணீர் குடிக்க இறங்கியுள்ளது. அப்போது இதில் சில ஆடுகள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. தத்தளித்த ஆடுகளை காப்பாற்றுவதற்காக நவீன் குமார் குளத்தில் இறங்கினார். ஆனால் அதிக ஆழம் இருந்ததால் நவீன் குமார் நீரில் மூழ்கினார். நவீன் குமாரை காப்பாற்றுவதற்காக வசந்த் மற்றும் மயில்சாமி ஆகிய இரண்டு சகோதரர்களும் குட்டையில் இறங்கினர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர் அதற்குள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் குளித்தலை டிஎஸ்பி கீதாஞ்சலி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.