சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் 3 கோடிக்கு நிலம்... இது உண்மையாண்ணே அம்புட்டும் புளுகா? வன்னி அரசு கலாய்

சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருப்பதாக வெளிவந்த செய்தி குறித்து வன்னிஅரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் 3 கோடிக்கு நிலம்... இது உண்மையாண்ணே அம்புட்டும் புளுகா? வன்னி அரசு கலாய்

பரபரப்பாகவும், அவ்வப்போது எடக்குமடக்காகவும் பேசி சிக்கலில் சிக்குவார் சீமான்.  சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளையும் வீடியோக்களையும் எடிட் செய்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்வார்கள் நெட்டிசன்கள். 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் தீபன் படத்திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விழாவில் அவர் பேசியதாக சில செய்திகள் சோஷியல் மீடியாவில் பரவின. 

“எனக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். அதுவும் அந்த வீட்டையும் காலி பண்ணச் சொல்லிவிட்டார்கள். நான் வீட்டிற்கு எங்கே போவேன்? அடுத்த மாதம் காலி பண்ணணும். என் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு எங்கே போவது? நானும் என் மனைவியும்னா பராவயில்லை. நாங்க பாட்டுக்கு ஒரு சின்ன குடிசையில் எங்கேயாவது இருந்திட்டு போவோம். ஆனா என் பிள்ளைகள், அந்த வாத்து, கோழிகள், புறா இதை எங்கே கொண்டு போய் போடுவது? எந்த வீட்டில் கொண்டு போய் வைத்தாலும் வீடு தரமாட்டான் தெரியுமா?
நானே வாடகை வீட்டில் இருக்கிறேன். அப்புறம் எப்படி வெளிநாட்டில் இருந்து வருகிறது என்று சொல்கிறீர்கள்? எனக்கு கோடி கோடியாய் பணம் வருதுன்னு சொல்றாங்க..? அப்ப உங்களுக்கு எங்கேயிருந்து வருதுன்னு சொல்லுங்க. அதை பத்தி புலனாய்வு பண்ணுங்க” என்று பேசியிருந்தார். 

இதை அடிப்படையாக வைத்து பலரும், உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். மேலும் சிலர், சென்னை வளசரவாக்கத்தில் அவர் வாடகைக்கு இருக்கும் பிரமாண்ட வீட்டினை காட்டி, இதுதான் சீமான் வசிக்கும் எளிமையான வீடு என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்று இது தொடர்பான ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. ஒரு நிலத்தின் விவரங்களை குறிப்பிட்டு, சில ஆதாரங்களையும் அது தெரிவித்திருந்தது. "அதிபரே, கொடைக்கானல்ல இருக்குற இந்த 6 ஏக்கர் நிலத்தை வித்து, சென்னையில வீடு வாங்கிக்கலாமே. எதுக்கு பிச்சை எடுக்குறீங்க? நல்ல விலைதான் போகுது வித்துட்டு வீடு வாங்குங்க. 2.43 ஹெக்டேராம், அப்படியென்றால் 6 acre. 6 acre = 2, 61, 360 சதுர அடி. ஒரு சதுர அடி இன்று 115 ரூபாய் என்றால் இடத்தின் சந்தை மதிப்பு 3கோடியே 36 லட்சம்" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. பதிவு இதையடுத்து, இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானது. 

இது குறித்து, விசிகவின் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சீமானுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "சீமான் மனைவிக்கு கொடைக்கானலில் இருக்கும் நிலம்..'' - ஆதாரத்துடன் அம்பலம்" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.. அத்துடன் "இது உண்மையாண்ணே" என்றும் சீமானிடம் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.