3 நாள் தொடர் விடுமுறை.. சென்னையிலிருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

3 நாள் தொடர் விடுமுறை.. சென்னையிலிருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் இன்றும் 610 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேவேளை, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து ஆம்னி பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணமாகி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, அதே எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்களிடம் 2 முதல் 3 மடங்குவரை அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை ஆம்னி பேருந்து நடத்துநர்களிடம் இருந்து பெற்று பயணிகளிடம் வழங்கினர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களுடன் சேர்த்து தலா மூன்று அதிகாரிகளை கொண்ட 5 குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டனர்.