ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... கடன் தொல்லையால் பரிதாப முடிவா..?

கடன் தொல்லையால் கணவன், மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை... கடன் தொல்லையால் பரிதாப முடிவா..?

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கல்லூரி பேராசிரியரான இவருக்கு அனுராதா என்ற மனைவியும் விஷ்ணு மற்றும் பரத் என்ற இரு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் விஷ்ணு திருமணமாகி பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.  இளைய மகன் தனியார் ஐடி நிறுவனத்தில் வீட்டிலிருந்தபடி பணியாற்றி வருகிறார்.

ராமலிங்கத்திற்கு அதிகப்படியான கடன்தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மூத்த மகன் விஷ்ணு ராமலிங்கத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிலுள்ள யாரும் தொலைப்பேசி அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த விஷ்ணு தன்னுடைய உறவினரை தொலைப்பேசி வாயிலாக அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற அவரது உறவினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஒரு மின்விசிறியில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோரும், மற்றொரு மின்விசிறியில் பரத்தும் புடவையால் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்ற ராமலிங்கத்தின் உறவினர்கள் மூவரின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவேரிபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மூவரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com