மேட்டூர் அனல்மின் நிலைய 3 அலகுகள் மூடல்... 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்?

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடியை தொடர்ந்து மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேட்டூர் அனல்மின் நிலைய 3 அலகுகள் மூடல்... 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்?
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் மேட்டூரில், தலா 210 மெகாவாட்  மின்உற்பத்தி செய்யும் 4 அலகுகள் கொண்ட  அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.

இதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்கென நாளொன்றுக்கு  26 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே ரயில்கள் மூலம் நிலக்கரி வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக  மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால்  840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள 2,3,4 ஆகிய 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட்டிற்கு பதிலாக 160 மெகாவாட் அளவுக்கு   மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே போதுமான கையிருப்பு இருந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழகத்துக்கு நிலக்கரியை அனுப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனல்மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  மேலும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தி இயங்குவதால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், தொழிற்சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com