274 இந்தியர்களுடன் 4வது விமானம் டெல்லிக்கு வருகை...!

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின்படி, நான்காவது விமானத்தில் 274 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பு அரங்கேறி வரும் நிலையில், இஸ்ரேலில் வசித்துவரும் 18 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர, ஆப்ரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன்படி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து 212 பேர், 235 பேர், 197 பேருடன் என 3 விமானங்களில் இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

இதையும் படிக்க : 5 மாநில தேர்தல் : காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தொடர்ந்து நான்காவது விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்தியர்கள் தலைநகர் டெல்லி திரும்பியுள்ளனர். மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தாயகம் திரும்பிய நிலையில், டெல்லி விமான நிலையத்தில் அவர்களை நெகிழ்ச்சியுடன் உறவினர்கள் வரவேற்றனர். 274 பேரையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 918 பேர் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது விமானத்தின் மூலம் 11 பெண்கள் 22 தமிழர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இஸ்ரேலில் பயின்றுவந்த ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் மதுரை வந்தடைந்தனர். தற்காலிகமாக மட்டுமே சொந்தஊர் திரும்பியதாகவும், போர்பதற்றம் குறைந்ததும் மீண்டும் ஆராய்ச்சியை தொடங்குவோம் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.