பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த  உணவை சாப்பிட்ட  5   குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள்  பயின்று வருகின்றனர். அங்கு சுஜி பிரியா என்பவர் ஆசிரியராகவும் நந்தினி என்பவர் சமையலராகவும் பணியாற்றி வரும் நிலையில் 22 குழந்தைகள்  இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்காக சமைக்கப்பட்ட உணவை 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். அப்போது உணவில் பல்லி இருப்பதைக் கண்டு குழந்தை ராம்பிரசாத்தின் பாட்டி அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கிருந்த ஆசிரியர் சுஜி பிரியாவிடம் காண்பித்துள்ளார்.

இது குறித்து ஆசிரியர் அலட்சியமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தெரியவர, அவர்கள் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளை நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குழந்தைகளை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஆம்பூர் நேதாஜி சாலையில் வந்த போது டயர் வெடித்து பழுதாகி நின்றதால் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கையிலே தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

இதனையடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள்  ( தீபிகா, , நந்திஷ் குமார், ராம்பிரசாத், வைசாலி, தீபிகா உள்ளிட்ட) 5   பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டு ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர்  நரியம்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் ஆய்வு மேற்க்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.