அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு - அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் அரசாணைபடி, அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு  - அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு  50% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. 

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை இந்தாண்டு இடைக்காலமாக செயல்படுத்த அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 50% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன், தமிழக அரசின் அசராணைபடி, இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.