மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்...

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்....இந்த வாசகத்துக்கு சொந்தக்காரர், கர்நாடகம் தந்த காவியத்தலைவி, இரும்புப் பெண்மணி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பி மறைந்த தினம் இன்று.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்...

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா, அரசியல் என்று இரண்டிலும் தன் அசாத்திய திறமையாலும், தைரியத்தாலும், துணிச்சலாலும் விண்ணளவு உயர்ந்த மாபெரும் ஆளுமை ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மக்களால் நான்...மக்களுக்காகவே நான் என்று சூளுரைத்து, அதன்படி வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, இரும்பு மங்கை' என்று தமிழ்நாட்டு மக்களால் போற்றப்பட்டு, அரசியல் எதிரிகளாலேயே 'தைரியசாலி' என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, 'அம்மா' என்று அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்பட்டு, தனிமுத்திரை பதித்த ஜெயலிலதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என்று தமிழ்நாட்டு அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் 2016ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். 

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். இதில், எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982ம் ஆண்டில் அரசியலில் தடம் பதித்தார். இதையடுத்து, 1983-ம் ஆண்டில் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். 

1984-ல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் அம்மையார் ஜெயலலிதா. பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை சட்டமன்ற உறுப்பினரானார். அத்துடன், தமிழ்நாட்டு சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார் ஜெயலலிதா.

இதையடுத்து, 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதலமைச்சராகவும் பதவியேற்றார். 1991, 2001, 2002, 2011, 2015, 2016 என்று 6 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, தொட்டில் குழந்தைத் திட்டம், மழைநீர் சேகரிப்புத் திட்டம், மகளிர் காவலர்கள், மகளிர் காவல் நிலையங்கள், விலையில்லா அரிசி, லேப்டாப், மிதிவண்டி, மிக்சி, கிரைண்டர் என்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் மட்டுமல்லாது, முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி பல வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைத் தேடித்தந்து, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாக திகழ்ந்தவர் அம்மையார் ஜெயலலிதா.

மோடியா? லேடியா? என்று பிரதமர் மோடிக்கே சவால் விடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலையை விட, ஜெயலலிதா அலை பெரிது என்று நிரூபித்துக்காட்டியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி தான் ஆட்சிக்கு வரும் என்ற தோற்றத்தை தவிடுபொடியாக்கி 2016-ல் மீண்டும் அதிமுகவை அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என்பதை உலகிற்கு பறைசாற்றியவர் தான் மறைந்த ஜெயலலிதா

2016 செப்டம்பர் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். மறைந்து 6 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதிமுகவாலும், திமுகவாலும் அதிகம் பேசப்படும் பெயராக வரலாற்றில் நீடித்து நிற்கிறார் ஜெயலலிதா.

மாலைமுரசு - செந்தில்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com