பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் சோதனையில் சிக்கிய தனியார் நிதி நிறுவனம்..!

பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் சோதனையில் சிக்கிய தனியார் நிதி நிறுவனம்..!

வேலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 79 ஆயிரம் பேர் மொத்தம் 4 ஆயிரத்து 383 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோசடி செய்த நிதி நிறுவனம்:

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்  நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்துள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை:

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய நிறுவனம் மீது வந்த  புகாரை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை:

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட சோதனையின் அடிப்படையில், இந்த நிறுவனத்தில் மொத்தமாக 79 ஆயிரம் பொதுமக்கள், தங்கள் முதலீடாக சுமார் 4 ஆயிரத்து 383 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.  இந்த நிறுவனத்தை தொடர்ந்து, மேலும் சில நிறுவனங்களையும் ஆரம்பித்து அதன் மூலமாகவும் முதலீடுகளை பெற்றதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிதி நிறுவனம் எந்த ஒரு முதலீடு திட்டமும் இல்லாமல், முதலீடு செய்தவர்களின் பணத்தையே, முதலீடு செய்தவர்களுக்கே வட்டியாக திருப்பிக் கொடுத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர் சோதனை:

இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவர்களுக்கு உரிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கையும், முதலீட்டு தொகையும் மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்