வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் மோதல்.. பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம்....

தஞ்சாவூர் அருகே வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பினர் தாக்கி கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் மோதல்.. பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம்....

தஞ்சாவூர்  மாவட்டம் வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கனிமொழி. இவரது கணவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மாடுகள் நேற்று மேய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரு தரப்பினரிடையே நேற்று லேசான கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊர் மக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று காலை ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மணிகண்டன் மற்றும் அவர்களது உறவினர்களை தாக்கி வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியுள்ளன

இந்த தாக்குதலில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார், 20க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் இன்று காலை வந்து தங்களது வீடுகளையும், வீட்டில் இந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் சரமாரியாக தாக்கினர்.

இது குறித்து காவல்துறையிடம் கூறியபோது, அவர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்று வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் காயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.