டெங்கு எதிரொலி: அசுத்தமான கட்டிடங்களுக்கு ரூ.3.50 லட்சம் அபராதம் - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 13 நாட்களில் மட்டும் 204 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 94 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொசு உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி உள்ள கட்டிட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

மேலும், சென்னை மாநகரில் 2 ஆயிரத்து 665 வணிக ரீதியான கட்டிடங்கள் மற்றும் 3 ஆயிரத்து 387 புதிய கட்டுமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 13 நாட்களில் மட்டும் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் டெங்கு தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.