தமிழக டி.ஜி.பியை சந்தித்த 14 வயது சிறுமி... எங்க உடமைகளை வாங்கித்தாங்க...

உயிரிழந்த தந்தைக்குச் சொந்தமான டிராக்டர், கலப்பை உள்ளிட்ட உடமைகளை மீட்டுத் தரும்படி 14 வயது சிறுமி டி.ஜி.பி-யை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.  

தமிழக டி.ஜி.பியை சந்தித்த 14 வயது சிறுமி... எங்க உடமைகளை வாங்கித்தாங்க...

ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷனா. 14 வயது சிறுமியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தாய் தந்தையருடன் கரூரில் வசித்து வந்தபோது தாய் தந்தையர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதால் சிறுமி தர்ஷனா ஈரோடுக்கு இடம்பெயர்ந்து தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமி தர்ஷனாவின் தந்தை உடல்நலக் குறைவால் காலமானதாகவும், அவர் உழைப்பில் லோன் மூலம் வாங்கிய டிராக்டரை தந்தையின் சகோதரியின் மகனான பூபாலன் என்பவர் அபகரித்து கோவை மாவட்டத்தில் உள்ள அவரது இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சிறுமி தர்ஷணாவின் தந்தை காலமானதைப் பயன்படுத்தி பூபாலன் அவர் பல்வேறு கடன்கள் வாங்கியுள்ளதாக பொய் கணக்குபோட்டு சிறுமி தர்ஷனா மற்றும் அவரது பாட்டியை மிரட்டி அவதூறாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து 14 வயதான சிறுமி தர்ஷனா தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் பள்ளிப் படிப்பை தொடர்ந்து வரும் நிலையில் தனது வாழ்வாதாரம் தனது தந்தையின் டிராக்டரையும், கலப்பையையும் நம்பியே இருப்பதாகவும், அதை தனது மாமாவான பூபாலன் பொய் கணக்குகள் கூறி அபகரித்ததோடு தன்னையும் தனது பாட்டியையும் மிரட்டி அவதூறாக பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுக்க ஈரோடு மற்றும் கரூர் காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அதனால் தனது தந்தையின் டிராக்டர், கலப்பை, இருசக்கர வாகனம், ஏ.டி.எம் கார்டு, செல்போன் உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் தனது மாமாவான பூபாலனிடம் இருந்து மீட்டுத்தந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும் சிறுமி தர்ஷனா தெரிவித்தார்.